ராஞ்சி: ஜார்க்கண்டில் வரும் 13-ம் தேதி மக்களவை தேர்தல் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலின் பணியாளர் ஜஹாங்கீர் ஆலமின் வீட்டில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
அப்போது ரூ.35 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று தனிச் செயலர் சஞ்சீவ் லால் மற்றும் அவரது வீட்டுப் பணியாளர் ஜஹாங்கிர் ஆலமை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இவ்வழக்குத் தொடர்பாக இரண்டாவது நாளாக நேற்று அரசு ஒப்பந்ததாரர் ராஜீவ் சிங் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.5 கோடியை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. ஜார்க்கண்டில் ஜேஎம்எம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆலம்கிர் ஆலம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். டெண்டர் ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் கடந்தாண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிச் செயலர் சஞ்சீவ் லாலிடம் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஜஹாங்கீர் ஆலம்சில காலம் அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் வீட்டிலும் பணிபுரிந்து இருக்கிறார். இதனால் அமைச்சர் ஆலம்கிரிடமும் விசாரணை நடத்தப்பட்ட இருப்பதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.