கோவை பஸ் நிலையத்தில் நகை வியாபாரியிடம் ரூ 35 லட்சம் பறிமுதல்.

கோவை ஏப்25 கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் நிலையத்துக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார் .அவர் முன்னுக்குப் பின் பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரைகாவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலம் குருவாயூரைசேர்ந்த வியாபாரி சத்தியவான் (வயது 43) என்பது தெரிய வந்தது .போலீசார் அவர் வைத்திருந்த பையைத் திறந்து சோதனை செய்தனர். அதற்குள் காகிதத்தால் சுற்றப்பட்ட ஒரு பார்சல் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது கட்டு கட்டாக 70 கட்டுகளுடன் மொத்தம் ரூ. 35 லட்சம் இருந்தது. அந்த பணம் எப்படி வந்தது? எங்கே கொண்டு செல்கிறீர்கள்? அதற்கான ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா? என்று போலீசார் கேட்டனர். அதற்கானஉரிய பதிலை அளி க்கவில்லை .மேலும் அவரிடம் அந்த பணம் எப்படி வந்தது? என்பதற்கான ஆவணங்களும் இல்லை. இதைத்தொடர்ந்து போலீசார் ரூ. 35 லட்சத்தை பறிமுதல் செய்தனர் .இது குறித்து போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் .அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் காட்டூர் போலீஸ் நிலையத்திற்குசென்றனர் .அவர்களிடம் சத்திய வானிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 35 லட்சத்தை போலீசார் ஒப்படைத்தனர். அந்த பணத்திற்கு வருமான வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து அவரிடம் வருமானத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.