ரூ.35 ஆயிரம் லஞ்சம்… வெள்ளலூர் சார்பதிவாளர், இளநிலை உதவியாளர் கைது – காரில் மறைத்து வைத்திருந்த ரூ. 13 லட்சம் சிக்கியது.!!

கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி .இவர் தனது சொத்து தொடர்பான அசல் ஆவணங்களை கேட்க வெள்ளலூர் சார் பதிவாளர் ( சப் ரிஜிஸ்ட்ரார்) அலுவலகத்துக்கு சென்றார் .அப்போது அங்கு சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருந்தார். அவர் இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவை சந்திக்குமாறு கூறினார் . பூபதிராஜா அசல் ஆவணங்கள் வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு சார்பதிவாளர் அறிவுறுத்தலின்படி கேட்டுள்ளார் .இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் கருப்புசாமி புகார் செய்தார். உடனே கூடுதல் துணை சூப் ரெண்டு திவ்யா, இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் லஞ்சம் கேட்கும் அதிகாரி கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கருப்பசாமியிடம்ரசாயன பொடி தடவிய ரூ. 35 ஆயிரத்தை கொடுத்தனர் .அவரும் வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று இளநிலை உதவியாளர் பூபதி ராஜாவிடம் கொடுத்தார். லஞ்ச பணத்தை அவர் வாங்கி சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலினிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.35 பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சார் பதிவாளரின் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மேலும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சார் பதிவாளரின் காரிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது காருக்குள் கத்தை கத்தையாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரு 13 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை கைப்பற்றினார்கள். இது தொடர்பாக சார் பதிவாளர் மற்றும் இளநிலை உதவியாளர் ஆகிய 2 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து கூடுதல் துணை சூப்பரண்டு திவ்யா கூறியதாவது:- லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக இருவரும் பிடி பட்டு இருப்பதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சோதனை நடத்தப்பட்ட வெள்ளலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த மாதமும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தி ரூ 1 லட்சத்து 50 ஆயிரத்து 50 பறிமுதல் செய்தனர் .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இருவர் கைதான சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.