ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்.. நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜர்..!

மிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. அப்போது ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்தது. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் என தெரிய வந்தது. இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு தாம்பரம் போலீசார் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும் படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் விளக்கம் அளிக்க பத்து நாட்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் காவல்துறை அலுவலகம் சார்பில் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. அதன்படி, மே-2ம் தேதி அதாவது இன்று ஆஜராகும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் கடந்த 26 ஆம் தேதி உத்தரவிட்டார். பின்னர் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் பிடிப்பட்டவர்களிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நயினார் நாகேந்திரன் உறவினர்கள் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முருகன் மற்றும் முருகனிடம் பணியாற்றும் ஆசைத்தம்பி ஆகிய இரண்டு பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. இன்று காலை 11 மணிக்குள் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.

சம்மன் அனுப்பப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி அலுவகலத்தில் நயினார் நாகேந்திரன் உறவினர் உள்பட 2 பேர் ஆஜராகியுள்ளனர். முருகன் மற்றும் ஆசைத்தம்பி இருவரும் நேரில் ஆஜராகியுள்ளனர். முருகனிடம் பணியாற்றும் ஜெய்சங்கர் என்பவரையும் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கிய வேலை காரணமாக அவர், ஆஜராக கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.