டிரோன் வடிவமைத்து தருவதாக கோவை இளைஞரிடம் ரூ.48.50 லட்சம் மோசடி- சென்னை தொழிலதிபருக்கு வலைவீச்சு.!!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நாராயணசாமி நகரை சேர்ந்தவர் வசந்தகுமார். இவரின் மகன் ரிஷி ( வயது 26) இவர் விவசாயத்துக்கு தேவையான நவீன கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார் .மேலும் அவர் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தேவையான டிரோன் தயாரித்து விற்பனை செய்ய திட்டமிட்டார். இதை தொடர்ந்து அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் முரளி கிருஷ்ணன் என்பவரை தொடர்பு கொண்டு விவசாயத்திற்கு தேவையான பல்நோக்கு டிரோன்களை வடிவமைத்து தரும்படி கேட்டார். இதற்கு கட்டணமாக ரூ.48 லட்சத்து 44 ஆயிரம் செலவாகும் என மதிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த பணத்தை ரிஷி பல்வேறு தவணைகளாக முரளி கிருஷ்ணனிடம் கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட முரளி கிருஷ்ணன் பல மாதங்கள் ஆகியும் டிரோன் வடிவமைத்து கொடுக்கவில்லை. இது குறித்து ரிஷி கேட்டபோது புதிய டிரோன்வடிவமைக்க மேலும் சில மாதங்கள் தாமதமாகும் என்று கூறினாராம் .இதன் பிறகு அவர் டிரோன் வடிவமைத்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரிஷி தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டார். ஆனால்பணத்தை திருப்பிக் கொடுக்காமலும்,,டிரோன் வடிவமைத்து கொடுக்காமலும் ஏமாற்றிவிட்டார். இதையடுத்து ரிஷி கொடுத்த புகாரின் பேரில் முரளி கிருஷ்ணன் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.