ஆன்லைன் மூலம் பட்டதாரி வாலிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி – சைபர் கிரைம் போலீசில் புகார்.!!

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறுவது, வேலை வாங்கி தருவது, போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது என்று பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பட்டதாரி வாலிபரிடம் நடைபெற்ற மோசடி குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் கூறியதாவது:-
பொள்ளாச்சியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது33). பி.காம் பட்டதாரி. இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் இவரது வாட்ஸ்-அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டி தருவதாக அதில் இடம் பெற்று இருந்தது. அதில் தொடர்பு கொண்ட கார்த்திக்கிடம், முதலீட்டு தொகையை அனுப்பி வைக்க வங்கி எண்ணை கொடுத்துள்ளனர். இதனை நம்பி, கார்த்திக் பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.60 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு முறை பணம் அனுப்பி வைக்கும் போதும், லாப தொகை அதிகரித்து இருப்பதாக கணினி மூலம் தெரிவித்துள்ளனர். ஆனால் தொகை கேட்டபோது “சுவிட்ச் ஆப் ” செய்துவிட்டனர். அதன் பின்னர் தான் கார்த்திக் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரவீணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.