கோவை: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி முதல்வர் தினகர் ( வயது 45) இவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை அவிநாசி ரோட்டில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணி (வயது 35 )அவரது மனைவி மெர்சி பிரியா (வயது 30) ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு அறிமுகமானார்கள். இந்த நிலையில் அவர்கள் தாங்கள் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும் . அதில் முதலீடு செய்தால் 3ஆண்டுகளில் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் ஆசைவாரத்தை கூறினார்கள். இதனால் நாள் முதற்கட்டமாக ரூ 1 லட்சத்து 75 ஆயிரம் முதலீடு செய்தேன். பின்னர் நான் முதலீடு செய்த பணத்திற்கு உரிய லாபம் தொகையை அவர்கள் கொடுத்தனர் . இதன் பின்னர் ரூ.7 லட்சம் முதலீடு செய்தேன். இதன் பின்னர் எனது மனைவி உறவினர்களிடமிருந்து பணத்தைப் பெற்று மொத்தம் ரூ 1 கோடியே 13 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். இதன் பின்னர் சில காலம் கழித்து எனக்கு ரூ. 47 லட்சம் திருப்பி கொடுத்தனர் .பின்னர் மீதமுள்ள ரூ 66 லட்சத்து 25 ஆயிரம் திருப்பித் தரும்படி அவர்களிடம் கேட்டேன். ஆனால் பலமுறை கேட்ட பின்னரும் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை . இதனால் நான் கோவை வந்து அவினாசி ரோட்டில் உள்ள அவர்கள் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்றேன். ஆனால் அந்த முகவரியில் நிதி நிறுவனம் செயல்படவில்லை. மூடப்பட்டிருந்தது. இதையடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்று எனது பணத்தை திருப்பித் தரும்படி கேட்டேன். அப்போது சுப்பிரமணி அவரது மனைவி மற்றும் அங்கிருந்த ஒரு நபர் என 3 பேர் சேர்ந்து என்னை கடுமையாக தாக்கினர் .மேலும் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் பேரில் சுப்பிரமணி அவரது மனைவி உட்பட 3 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை மிரட்டல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..