சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது மீனவர் கிராமத்தில் இருந்த மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட நிலையில் எஞ்சிய இடங்கள் காலியாக இருந்தது. அதனை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஊழல் கையூட்டு ஒழிப்பு பாசறை மாவட்ட செயலாளர் செண்பகசாமி என்பவர் வீட்டுமனை பட்டா வாங்குவதாக கூறி அங்கு வசிக்கக்கூடிய பொதுமக்களிடம், மீனவ பெண்களிடம் தலா ரூ 20,000 முதல் ரூ 30,000 என சுமார் 40க்கும் மேற்பட்டவரிடம் 8 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
அவர்களுக்கு போலியான பட்டாவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிராம மக்கள் தங்களுக்கு இடம் வேண்டுமென்று கிராம முக்கியஸ்தர்களிடம் தெரிவித்த போது, எஞ்சிய இடங்களை வாங்கி தருவதாக தெரிவித்தனர். எஞ்சிய இடத்தை தற்போது செண்பகசாமியின் என்பவர் பலருக்கு போலிபட்டா போட்டு வாங்கி கொடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதை அடுத்து அந்த கிராமத்தில் உள்ள ஊர் முக்கியஸ்தர்கள் சீர்காழி வட்டாட்சியரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதனை எடுத்து செண்பகசாமி போலி பட்டா வழங்கியது தெரியவந்தது. இது தொடர்பாக சென்பகசாமியை கைது செய்ய வேண்டும் என மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட கிராமத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் செண்பகசாமி போலி பட்டா வழங்கியது தெரியவந்ததை அடுத்து செண்பகசாமி மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரை பெற்ற காவல்துறையினர் செண்பகசாமி மற்றும் அண்ணாதுரை ஆகிய இருவரையும் தேடிவந்த நிலையில் செண்பகசாமி தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.