சென்னை அடுத்த வானகரம் இயேசு அழைக்கிறார் கன்வென்ஷன் சென்டரில் அ.தி.மு.க.தலைமைக் கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி , சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மறைந்த ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க.சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுவது வழக்கம்.அவரது மறைவிற்கு பின்னர் தொடர்ந்து அ.தி.மு.க.சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவ பெருமக்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
பைபிள்களில் இறைவன் இயேசு குழந்தையாக பிறப்பது யாருக்கு சொல்லப்பட்டது என்றால் ஆடு மாடுகளை மேய்க்கும் கீழ்த்தட்டு மக்களாகிய மேய்ப்பர்களுக்கும், விவசாயிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. அரசர்களுக்கோ , அரசுக்கோ மேல்தட்டு மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை.இதே போலத் தான் அ.தி.மு.க.வில் அடித்தட்டு மக்களும் உயர்ந்த நிலைக்கு வரலாம் என உள்ளது.அ.தி.மு.க.வில் உழைத்தால் உயரலாம். அ.தி.மு.க.அரசின் திட்டங்களை தி.மு.க.அரசு நிறுத்தி விட்டது.அ.தி.மு.க.ஆட்சியில் தான் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள நிதி உதவி அளிக்கப்பட்டது.ஆனால் தி.மு.க.ஆட்சியில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள யாரையும் அனுப்பவில்லை.
அ.தி.மு.க.சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட கட்சி.இந்த கட்சியை அழிக்க
நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். அ.தி.மு.க.கிறிஸ்தவ மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது.எனவே , மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி அமையும் போது , கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார்.இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார். முன்னதாக கிறிஸ்துமஸ் விழாவிற்கு வருகை தந்த எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின், பூச்செண்டு கொடுத்து வரவேற்றார். இவ்விழாவில் அ.தி.மு.க.தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.கள், கிறிஸ்தவ பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் கிறிஸ்துமஸ் கேக் மற்றும் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது.