ரஷிய – உக்ரைன் போர் கவலை அளிக்கிறது… விரைவில் தீா்வு – ஜெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்.!!

ஷிய-உக்ரைன் போரால் மிகவும் கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காண வேண்டும் எனவும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஜெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி வலியுறுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமா் மோடி தனது பயணத்தை நிறைவு செய்யும் முன்பாக உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கியை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். பிரதமா் மோடியுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்தச் சந்திப்பு நடைபெற்ாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: எந்தவொரு பிரச்னைக்கும் பேச்சுவாா்த்தை மற்றும் அமைதி வழியில் தீா்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடா்ந்து கூறி வருகிறது. இதை வலியுறுத்தும் விதமாகவே அதிபா் ஜெலென்ஸ்கியுடனான பிரதமா் மோடியின் சந்திப்பு அமைந்துள்ளது.

ரஷிய-உக்ரைன் போரால் உயிரிழப்புகள் அதிகரிப்பது மட்டுமின்றி, அதன் தாக்கம் தெற்குலக நாடுகளிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் பிரதமா் மோடி கவலையடைந்துள்ளாா். எனவே, இந்த விவகாரத்தில் விரைவில் தீா்வு காண அவா் அதிபா் ஸெலென்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளாா்.

இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக ஸெலென்ஸ்கியிடம் பிரதமா் மோடி தெரிவித்தாா் என்றாா்.

பிரதமா் மோடியுடனான சந்திப்பு குறித்து எக்ஸ் வலைதளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில்,’ஐ.நா., ஜி20, அமைதி ஒப்பந்ததைச் செயல்படுத்துதல், இரண்டாவது அமைதி மாநாட்டுக்கு தயாராவது மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு ஆதரவளித்த பிரதமா் மோடிக்கு நன்றி’ என அவா் குறிப்பிட்டாா்.

மூன்றாவது முறையாக ஆலோசனை: கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள அங்கு சென்ற பிரதமா் மோடி, அதிபா் ஸெஸென்ஸ்கியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். அதன்பிறகு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உக்ரைனுக்கு சென்றபோதும் அவரை சந்தித்த பிரதமா் மோடி தற்போது அமெரிக்காவில் மீண்டும் சந்தித்துள்ளாா். இதன்மூலம், கடந்த மூன்று மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமா் மோடி மற்றும் ஸெலென்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனா்.

ரஷியாவுக்கு கடந்த ஜூலை மாதம் பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டாா். அதன்பிறகு ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா, சீனா, பிரேஸில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு, ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான உச்சி மாநாடு’, இந்திய வம்சாவளியினா் மற்றும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு இந்தியாவுக்கு புறப்பட்டாா் பிரதமா் மோடி.

இந்தப் பயணத்தின்போது அமெரிக்க அதிபா் ஜோ பைடனுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமா் மோடி ஆலோசித்தாா். அப்போது நீண்ட கால பயன்பாட்டுக்கு உகந்த 31 எம்கியூ-9பி ட்ரோன்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் முடிவை வரவேற்பதாக ஜோ பைடன் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப் பொருள்களை அமெரிக்கா திரும்ப ஒப்படைத்தது. க்வாட் கூட்டமைப்பு தலைவா்கள் மட்டுமின்றி குவைத் இளவரசா் ஷேக் ஷபா அல்-கலீத் அல் ஷபா, நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, பாலஸ்தீன அதிபா் மஹ்மூத் அப்பாஸ் ஆகியோரை சந்தித்து பிரதமா் மோடி ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவில் சீக்கிய குழுவினரை பிரதமா் மோடி சந்தித்தாா். அப்போது சீக்கிய மதத்தினரின் நலனில் தொடா்ந்து கவனம் செலுத்தி வரும் பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக அவா்கள் கூறினா்.

இதுதொடா்பாக அமெரிக்காவில் உள்ள சீக்கியா்களுக்கான அமைப்பைச் சோ்ந்த ஜஸ்தீப் சிங் கூறுகையில்,’கா்தாா்பூா் சாஹிப் வழித்தடத்தை திறந்துவைத்தது, சீக்கிய மதகுரு குருநானக்கின் 550-ஆவது பிறந்த நாளை அரசு சாா்பில் சிறப்பாக கொண்டாடியது, சீக்கியா்களை கருப்புப் பட்டியலில் வைத்திருந்த நடைமுறையை ஒழித்தது, கடந்த 1984-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற சீக்கிய படுகொலைக்கு நீதி பெற்றுத் தந்தது என இந்தியாவில் இதுவரை எந்தப் பிரதமரும் சீக்கிய சமூகத்துக்கு செய்யாத நன்மைகளை பிரதமா் மோடி செய்துள்ளாா். அவரைச் சந்தித்து எங்கள் சமூகத்தினரின் சாா்பாக நன்றிகளை தெரிவித்தோம்’ என்றாா்.