சாமி கும்பிட்டுவிட்டு திருடும் கும்பல்… கொள்ளையடித்த பணத்தில் கார்,பங்களா.. சுற்றுலா, சொகுசு வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக மாநகர போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களை பிடிக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கன்னையன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புகார்கள் வந்த பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். மேலும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் சாதராண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு நகை பறிப்பில் ஈடுபட்ட கும்பல் மருதமலை முருகன் கோவிலுக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார் மருதமலை கோவில் பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ரவி (வயது47). அவரது மனைவி பழனியம்மாள் (வயது40), அவரது உறவினர்கள். வனிதா ( வயது37), நதியா (வயது 37) என்பதும், இவர்கள் கோவையில் குடும்பத்தோடு தொடர் நகைபறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்களிடம் இவர்கள் வேறு எங்கு எல்லாம் கைவரிசை காட்டியுள்ளனர். திருடிய பணத்தை என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது ரவி. இவர் தான் எங்கு திருட வேண்டும்?. எப்படி திருட வேண்டும்?. எந்த சமயத்தில் அந்த பகுதிக்கு செல்ல வேண்டும்? என்றெல்லாம் திட்டம் வகுத்து கொடுப்பார். அவர் போட்டு கொடுக்கும் திட்டத்தின்படியே பெண்கள் 3 பேரும் திருட்டில் ஈடுபடுவார்கள். குறிப்பாக பொதுமக்கள் கூட்டம் அதிகம் உள்ள கோவில், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலேயே தங்கள் கைவரிசையை காட்டி வந்துள்ளனர்.

இந்த கொள்ளை கும்பல் மாதத்தில் 30 நாட்களில் 20 நாட்கள் மட்டுமே திருடுவார்கள். மற்ற 10 நாட்கள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை கொண்டு பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இதுவரை புதுடெல்லி, மும்பை, காஷ்மீர் என பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். மேலும் இவர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டே கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி வந்துள்ளனர். இந்த கொள்ளை கும்பல், தாங்கள் கொள்ளையடித்த பணத்தை வைத்து இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ரவிக்கு பெங்களூரில் ரூ.5 கோடி மதிப்பில் சொகுசு பங்களாவும், ஒரு காரும் உள்ளது. தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் தங்கள் பிள்ளைகளை டாக்டர் மற்றும் என்ஜினீயரிங் படிக்க வைத்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவி, பழனியம்மாள், நதியா, வனிதா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.. பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் இவர்கள் கோவை மட்டுமின்றி வேறு எங்காவது கைவரிசை காட்டி உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தக் கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்..