கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நடூர் ஏ.டி. காலனியை சேர்ந்த அபிஷேக் (வயது 26) என்பவர் பணிபுரிந்து வந்தார் .இவர் போலி ஆவணம் தயாரித்து வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து தலைமை வசூல் மேலாளர் ரமேஷ் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் நடத்திய விசாரணையில் இ.எம்.ஐ. செட்டில்மெண்ட் தொகையில் தள்ளுபடி தருவதாக கூறி வசூலித்து அதை நிறுவனத்தில் செலுத்தாமலும், கடன் முடிந்ததாக அவர்களுக்கு போலி தடையில்லா சான்று கொடுத்து ஏமாற்றியும் ரூ. 40 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ( எண்6) கோர்ட்டில் ஆஜர் ஆனார். அவரை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நிலைய நீதிபதி உத்தரவிட்டார்.பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.