ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அரசு மருத்துவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி ஆவாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(32). அரசு மருத்துவரான இவர் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அரசினர் மருந்தகத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது அயல் பணியாக சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள கோம்புபள்ளம் பகுதியில் வாடகை வீட்டில் மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார். இவரது மனைவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீடான திருப்பூர் நாச்சி பாளையத்திற்கு சென்ற நிலையில் மருத்துவர் சதீஷ்குமார் வீட்டில் தனியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தள்ளி உள்ளே சென்று பார்த்தபோது அறையில் மருத்துவர் சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கையில் குளுக்கோஸ் நரம்பில் குத்தும் பகுதியில் ஊசி சிரிஞ்ச் உடன் உடல் தொங்கிய நிலையில் இருந்த அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் ஏஎஸ்பி அய்மன் ஜமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஈரோட்டில் இருந்து துப்பறியும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மருத்துவர் சதீஷ்குமாருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிய நிலையில் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் சதீஷ்குமார் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தியா அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.