சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து தின்ற காட்டு யானைகளால் பரபரப்பு.!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. சாலையில் நடமாடும் காட்டு யானைகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளை தும்பிக்கையால் பறித்து தின்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு செல்வதற்காக சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 1 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் கரும்பு லாரியை வழிமறித்ததால் லாரி ஓட்டுநர் அச்சமடைந்து லாரியை நிறுத்தினார். லாரியின் அருகே வந்த காட்டு யானைகள் தனது தும்பிக்கையால் லாரியின் மீது இருந்த கரும்பு துண்டுகளை  பறித்து தின்றபடி சுமார் அரை மணி நேரம் நகராமல் நின்றது. அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுனர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார். இதனால் அவ்வழியே சென்ற வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. காட்டு யானைகள் கரும்பு லாரியை வழிமறித்து நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  சுமார் ஒரு மணி நேரம் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் வாகனங்கள் புறப்பட்டு சென்றன. காட்டு யானைகள் கரும்பு லாரியை வழிமறித்து நின்றதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.