ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ந்து நாள் முழுவதும் தீ மிதித்து பண்ணாரி மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக பண்ணாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்று அம்மன் சப்பரம் கோவிலை சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 28 ஆம் தேதி கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் இரவில் அம்மன் புகழ் பாடும் பாடல்களை பாடியபடி கம்ப நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா இன்று அதிகாலை துவங்கியது. முன்னதாக அதிகாலை 2.50 மணிக்கு தெப்பக்குளத்திற்கு அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிக்காக மேளதாளம் முழங்க புறப்பட்டு சென்றனர். தெப்பக்குளத்தில் இருந்து படைக்கலத்துடன் அம்மன் அழைத்து வரப்பட்டு அதிகாலை 3.40 மணிக்கு படைக்கலம் கோயிலை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து கோவில் முன் தயார் செய்யப்பட்ட குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலர் பந்து உருட்டுதல் நிகழ்ச்சி நடந்ததை தொடர்ந்து திருக்குண்டம் திறக்கப்பட்டது. அதிகாலை 3.57 மணிக்கு திருக்குண்டம் முன் சிறப்பு பூஜை செய்து பூசாரி ராஜசேகர் பய பக்தியுடன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து பரம்பரை அறங்காவலர்கள் கோவில் பணியாளர்கள் குண்டம் இறங்கினர். பின்னர் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தில் தீ மிதித்த பக்தர்கள் நேராக கோவிலுக்குள் சென்று பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தனர். மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நாள் முழுவதும் பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்படுவர். அதனை தொடர்ந்து கால்நடைகளோடு விவசாயிகள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவர்.குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கோவை ஐஜி சுதாகர் தலைமையில் 1600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு சிறப்பு இலக்கு படை ஐஜி முருகன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, ரித்தீஷ் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட விஐபி க்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தை சுற்றிலும் தீயணைப்பு வீரர்கள் பக்தர்கள் குண்டத்தில் தவறி விழாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மருத்துவ துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீக்குண்டத்தில் தவறி விழுந்து காயம்பட்ட பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று மாலை வரை ஒன்றரை இலட்சம் பக்தர்கள் குண்டம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.