செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை… அரசியல் காழ்புணர்ச்சி இல்லை – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க கூட்டம் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

மாநில தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ” 2014ஆம் ஆண்டுகக்கு முன்பு ஊழலை மட்டுமே மையமாக வைத்து திமுகவும் காங்கிரசும் ஆட்சி நடத்தி வந்தது. அதன் பிறகு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊழல் ஒழித்து கட்டப்பட்டு இன்று உலக அளவில் இந்தியா மூன்றாவது வளர்ந்த நாடாக உள்ளது.” என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த, மத்திய அமலாக்கத்துறை என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்திருக்கிறார்கள். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏதும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.