சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒட்டுமொத்த நாடும் துணை நிற்கும்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசின் சேவைகள், உதவிகளை பெற மக்கள் தவமாய் காத்திருந்தனர். இதற்காக இடைத்தரகர்கள், செல்வாக்குமிக்கவர்களிடம் அவர்கள் மன்றாடினர். தற்போது அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு அனைத்து அரசு சேவைகளும் மக்களை நேரடியாக சென்றடைகின்றன.
1,500-க்கும் மேற்பட்ட பழமையான சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஓராண்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்டம், யூனியன் பிரதேசம், மாநில அரசுகள், மத்திய அரசில் சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சீர்திருத்தங்கள் அமல் செய்யப்பட்டு உள்ளன. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் புதிய கல்வி கொள்கை வரையறுக்கப்பட்டு உள்ளது. இதில் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதில் புதிய கல்வி கொள்கை முக்கிய பங்கு வகிக்கும். இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படு கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ கல்வி இடங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 75,000 மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்படும்.
வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது விவசாயிகளுக்கு எளிதாக கடன் கிடைக்கிறது. அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உலகத்தின் இயற்கை வேளாண்மை உற்பத்தி மையமாக பாரதத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்.
நாட்டின் சில இடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மனதை காயப்படுத்துகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சமானிய மக்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர். நானும் அதே உணர்வில் இருக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடூர குற்றம் இழைப்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கலாம்.
பாரதத்தில் தயாரிக்கப்படும் செல்போன்கள் உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. தற்போது செமி கண்டக்டர் துறைக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். உள்நாட்டில் செமி கண்டக்டர்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் சர்வதேச தரத்தில் உள்ளன. இந்த நேரத்தில் பொருட்களின் வடிவமைப்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ‘பாரதத்தில் வடிவமைப்போம், உலகத்துக்காக வடிவமைப்போம்’ என்ற கொள்கையுடன் முன்னேறி செல்ல வேண்டும்.
ஒரு காலத்தில் 2ஜி தொழில்நுட்பத்துடன் போராடி கொண்டிருந்தோம். இப்போது நாடு முழுவதும் 5ஜி சேவை அமல் செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக 6ஜி சேவையை அறிமுகப்படுத்த அதிதீவிரமாக பணியாற்றி வருகிறோம்.
ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இப்போது ஆயுதங்களையும் பாதுகாப்பு தளவாடங்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உலக நாடுகளை ஒப்பிடும்போது பாரதத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் துறையில் அபார வளர்ச்சி அடைய வேண்டும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பாரதத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்நிய முதலீடுகள் பெருகினால், வேலைவாய்ப்பு கள் அதிகரிக்கும்.
வாரிசு அரசியல், சாதி அரசியல் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளன. `எனது பாரதம்’ திட்டம் சார்ந்த இணையத்தில் ஏராளமான இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசியல் பின்புலம் இல்லாத சுமார் ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் குழப்பமான சூழல் நீடிக்கிறது. அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து பாரதத்தின் 140 கோடி மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வங்கதேசத்தில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசமைப்பு சாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் பாதுகாவலனாக அரசமைப்பு சாசனம் விளங்குகிறது.
இந்த சூழலில் பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து உச்ச நீதிமன்றம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது.
தற்போது 75-வது ஆண்டு அரசமைப்பு சாசன தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் பொது சிவில் சட்டம் என்ற லட்சிய கனவை நிறைவேற்றுவது அவசியம். இன்றைய நவீன உலகில் மதம் அடிப்படையிலான சட்டங்கள் தேவையில்லை. மதச்சார்பற்ற சிவில் சட்டங்களே நாட்டுக்கு தேவை. இந்த இலக்கை நோக்கி நாம் முன்னேறி செல்ல வேண்டும்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு பல்வேறு காலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. 6 மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. அப்போது தேர்தல் நடத்தை விதிகளால் அரசு திட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன்காரணமாக நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது.
எனவே `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்தேன். இதுதொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையம், திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்திருக்கிறது. இந்த கனவு திட்டத்தை நனவாக்க அனைவரும் ஒன் றிணைய வேண்டும்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 40 கோடி மக்கள் ஒன்றிணைந்து நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்தனர். தற்போது 140 கோடி மக்கள் வசிக் கிறோம். நாம் ஒன்றிணைந்து வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் 65 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றினார். கடந்த 2016, 2018, 2022, 2023-ம் ஆண்டுகளில் 90 நிமிடங்களுக்கும் மேலாக அவர் உரையாற்றினார்.
கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி செங்கோட்டையில் 56 நிமிடங்களில் சுதந்திர தின உரையை நிறைவு செய்தார். இது அவருடைய குறுகிய நேர உரை ஆகும். தற்போது அவர் 98 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றி உள்ளார். இது அவரின் மிக நீண்ட உரை ஆகும்.