கோவை துடியலூர் மற்றும் சரவணம்பட்டி பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலும், தனியாக அறை எடுத்து தங்கி இருந்தும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த பகுதிகளில் படிக்கும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து. ஒரு கும்பல் கல்லூரி மாணவர்ளுக்கு கஞ்சாவை சப்ளை செய்து அவர்கள் மூலமாக கஞ்சாவை விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது.
சம்பவத்தன்று துடியலூர் போலீசாருக்கு வெள்ளக்கிணறு குளம் அருகே சில கல்லூரி மாணவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த கல்லூரி மாணவர்கள் கோட்டையாம் பாளையத்தை சேர்ந்த ரவிந்தரன் (வயது 21), கீரநத்தத்தை சேர்ந்த நந்தகுமார் (22), சரவணம்பட்டியை சேர்ந்த சதீஸ்வரன் (19), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அக்ஷய்குமார் (22), கோவில்பாளையத்தை சேர்ந்த தினேஸ்வரன் (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். கல்லூரி மாணவர்களுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து கஞ்சாவை சப்ளை செய்யும் முகேஷ் பட்டேல் (23) என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.