சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார்.
இந்த நிலையில் திடீரென செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. அதேபோல் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார்.
சட்டசபை கூட்டத்தில் கூட செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையில் சுமூக நிலை ஏற்படவில்லை. அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்று அவரிடமே கேளுங்கள் என்று பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இடையில் மோதல் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, 3 கார்கள் மாறி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர்.
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்று பார்க்கப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பும் இதனை உறுதி செய்யாத நிலையில், அதிமுகவில் பரபரப்பான சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்த செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மதுரையில் இருந்து டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு உடனடியாக தமிழ்நாடு திரும்பி இருக்கிறார். இதனால் அதிமுகவினர் இடையிலே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் டெல்லி சென்றுவிட்டு செங்கோட்டையன் அவசரமான தமிழ்நாடு திரும்பி வருவதற்கான காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்களும் விவாதித்து வருகின்றனர்.