செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி… சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் – வானதி சீனிவாசன்..!

கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் பல்வேறு வகை மரக்கன்றுகளை நடவு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசில் அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தரவில்லை என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. சாட்சிகள் பாதிக்கப்படும் என்பதால்தான் அவருக்கு ஜாமீன் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. திமுக அரசு, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை ஒருபோதும் நியாயமான விசாரணைக்கு அனுமதித்ததில்லை.

சவுக்கு சங்கர் ஒரு காலத்தில் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தவர். இன்று அவர் அரசை விமர்சித்ததால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறார். திமுக அரசு சட்டத்தை எந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்கிறது என்பதை பார்க்கிறோம். செந்தில் பாலாஜி அரசின் முழு ஆதரவைப் பெற்ற அதிகாரமிக்க அமைச்சராக இருந்தவர். மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால் சாட்சிகள் பாதிக்கப்படுவர். எனவே, தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். ஊழலுடன் சமரசம் செய்து கொள்ளமாட்டோம் என முதல்வர் கூறுவதை செயலிலும் காட்ட வேண்டும்” என்று வானதி சீனிவாசன் கூறினார்.