செந்தில்பாலாஜி வழக்கு… நாங்களே நேரடியாக கண்காணிப்போம் – உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு.!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

திமுக  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிமீது ஏராளமான வழக்குகள் உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பாக அவர் கடந்த ஒராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதற்கிடையில் அவர் மீதான வழக்குகளில் அரசு (திமுக) வழக்கறிஞர்கள் முறையாக வாதாடுவது இல்லை என்றும் குற்றவாளிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் வழக்கில் நடுநிலையான அரசு வழக்கறிஞரை நியமிக்க கோரி, பாலாஜி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதுபோல செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டையாக உள்ளது. அதனால் சிறப்பு வழக்கறிஞர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்தது ஏன் என்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். அப்போது, குறுக்கிட்ட மனுதாரர் (பாலாஜி) தரப்பு வழக்கறிஞர், செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழ்நாடு அரசு முட்டுக்கட்டையாக செயல்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூறிய நீதிபதிகள், அரசியல்வாதிகள் தொடர்புடைய அனைத்து வழக்குகளுமே சிக்கல் நிறைந்ததாக உள்ளதாக கருத்து தெரிவித்ததுடன், இதுபோன்ற அரசியல்வாதிகளின் அனைத்து வழக்குகளுக்கும் சிறப்பு வழக்கறிஞர்களை நியமித்து விசாரணை நடத்துவது என்பது இயலாத காரியம் என்று நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடர்பாக சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது, அப்போது நீதிபதிகள், சிறப்பு வழக்கறிஞர் தனது பணியை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், செந்தில் பாலாஜி வழக்கில் கீழமை நீதிமன்ற விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணை எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து அவ்வப்போது அறிக்கை பெற்று, மேற்பார்வை செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து , செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வழக்கின் நிலை குறித்து அறிக்கை தர உத்தரவு பிறப்பித்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்..