கேரள சினிமாவை உலுக்கும் பாலியல் புகாரில், மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகை ஒருவர், மாஃபியா கும்பலால் காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிப் போட்டது. இதனை தொடர்ந்து கேரள அரசு அமைக்கப்பட்ட ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபிய கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்று முன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் நடிகை அளித்த புகாரில் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேறு காவல் நிலையங்களில் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மலையாள நடிகர் இடவேலா பாபு என்பவர் மீதும் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொது செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில், 2016-ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து நடிகர் சித்திக் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியானது. எனவே தனது வக்கீல் மூலமாக நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற முயன்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதுவரை இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், மணியன் பிள்ளைராஜு, பாபுராஜ், பிரபல இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது புகார் வந்துள்ளதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.