டெல்லி: உண்மையான சிவசேனா யார்? என்பதில் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் இடையே போட்டி இருந்தது.
இந்த விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பு இருந்த நிலையில் நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததோடு, அவர்கள் தான் சிவசேனா கட்சி மற்றும் வில்அம்பு சின்னத்தை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. இந்த உத்தரவின் பின்னணியில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவில் ஏற்பட்ட பிரச்சனையை சுட்டிக்காட்டி தான் அதனடிப்படையில் தான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சிவசேனா இரண்டாக பிரிந்த நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் 40 எம்எல்ஏக்களும், 13 எம்பிக்களும் உள்ளனர். மாறாக உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியில் 15 எம்எல்ஏக்களும், 5 எம்பிக்களும் உள்ளனர்.
இந்நிலையில் தான் உண்மையான சிவசேனா யார்? என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே அணிகள் இடையே போட்டி ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனாவின் சின்னம் முடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இருதரப்பும் விடவில்லை.
சிவசேனா கட்சி மற்றும் அதன் வில் அம்பு சின்னத்துக்கு உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரினர். இதுதொடர்பாக ஆவணங்கள் சமர்பிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி தான் என அங்கீகரித்தது. மேலும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவிடம் வழங்கப்படும் என அறிவித்தது.இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று 78 பக்க உத்தரவுகளை பிறப்பித்தது. பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தான் இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
கடந்த 2019 தேர்தலில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 55 சிவசேனா எம்எல்ஏக்களில் ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் 40 எம்எல்ஏக்கள் கிட்டத்தட்ட 76 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகவும், உத்தவ் தாக்கரே அணியில் உள்ள 15 எம்எல்ஏக்கள் 23.5 சதவீத வாக்குகள் பெற்றதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில் தான் ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனா என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
அதாவது கடந்த 2019 சட்டசபை தேர்தல் வெற்றி பெற்ற 55 சிவசேனா எம்எல்ஏக்களும் கட்சிக்காக மொத்தம் 47 லட்சத்து 82 ஆயிரத்து 440 ஓட்டுக்களை பெற்றனர். தற்போது ஏக்நாத் ஷிண்டே அணியில் மொத்தம் 40 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் மொத்த ஓட்டில் 36 லட்சத்து 57 ஆயிரத்து 327 ஓட்டுக்களை அவர்கள் மட்டுமே பெற்றிருந்தனர். இதன்மூலம் அவரது அணியே பலமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மொத்த ஓட்டில் 76 சதவீதத்தை இந்த அணி கொண்டுள்ளது. மாறாக உத்தவ் தாக்கரே அணியில் 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் இவர்கள் பெற்ற ஓட்டுக்கள் என்பது 11 லட்சத்து 25 ஆயிரத்த 113 என்ற அளவில் மட்டுமே உள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையம் பெரும்பான்மை அடிப்படையில் ஏக்நாத் ஷிண்டேவை உண்மையான சிவசேனாவாக அங்கீகரித்துள்ளது.
மேலும் இந்த உத்தரவில் அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளில் இதேபோல் 2 அணிகள் உருவானபோது போடப்பட்ட உத்தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னம் மற்றும் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்சனைகள் நேற்றைய உத்தரவில் மேற்கொள் காட்டப்பட்டு இருந்தன.
2017 காலக்கட்டத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி இரு அணியாக பிரிந்தது. இதில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவ் இடையே இரு அணிகள் உருவாகின. இதில் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற இருவரும் போராடினர். இந்த வேளையில் சமாஜ்வாதியில் 228 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் அகிலேஷ் யாதவுக்கு 205 பேரும், 68 எம்எல்சிக்களில் 56 பேரும், 24 எம்பிகளில் 15 பேரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கு ஒதுக்கப்பட்டது. முலாயம் சிங்கிற்கு ஏமாற்றமே கிடைத்தது.
இதேபோல் தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ல் காலமானார். 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் முதல்வரானார். இருப்பினும் அவர் பதவியில் இருந்து 2017 ல் இறக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா மூலம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றார். 2017ல் ஆகஸ்டில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைந்து வெளியேற்றினர். மேலும் இரட்டை இலை சின்னத்துக்கு தனித்தனியே தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரப்பட்டது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு அணியும் வாதம் வைத்தது. இதில 2017 நவம்பர் 23ல் அதிமுக எம்எல்ஏக்கள், அமைப்பு சார்ந்த பொறுப்புகளில் உள்ளவர்களின் ஆதரவு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை பார்த்து இரட்டை இலை சின்னம் ஓ பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சசிகலா-தினகரன் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தான் சிவசேனா கட்சி, சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேவுக்கு நேற்று தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தபோது சமாஜ்வாடி, அதிமுக விவகாரத்தை மேற்கொள் காட்டி இருந்தது. இந்த 2 வழக்குகளிலும் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் இருக்கும் பக்கம் கட்சியின் பெயர், சின்னம் பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டதை போல் நேற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இது தான் உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.