ஷாக்!! 15 பவுன் நகையை கொள்ளையடித்ததாக நாடகமாடிய கோவை அமமுக மகளிர் அணி நிர்வாகி – போலீஸ் விசாரணையில் குட்டு அம்பலம்.!!

கோவை கணபதி நேரு நகரை சேர்ந்தவர் விஜயகுமார் .இவரது மனைவி சந்திரகலா ( வயது 52 ) இவர் கோவை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக மகளிர் அணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாத 28-ஆம் தேதி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் சத்தி ரோட்டில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் சந்திரகலா கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றதாகவும், அப்போது சந்திர கலாவும், அவரது கணவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததாகவும், இதனை தொடர்ந்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையில் கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஒரு நபரை பிடித்து விசாரித்த போது கடந்த மாதம் கணபதி பகுதியில் சந்திரகலாவிடம் வழிப்பறி செய்ய முயன்றதாகவும் ஆனால் 15 பவுன் நகையை பறிக்கவில்லை என்றும் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் சந்திரகலாவை அழைத்து விசாரிக்கும் போது நகை வழிப்பறி செய்யப்படவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்திரகலா நகையை பறிகொடுத்ததாக நாடகமாடிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..