வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 8.36 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 4.9 அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், மொராக்கோவில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2,862 ஆக அதிகரித்துள்ளது. இதுபோன்று இடிபாடுகளில் சிக்கி 2,562 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஸ்பெயின், யுனைடெட் கிங்டம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் மொராக்கோ மீட்பு முயற்சிகளில் இணைந்துள்ளன.