கோவையில் அதிர்ச்சி சம்பவம்… கேரள தொழிலதிபர் காரை வழிமறித்து தாக்கிய கும்பல் – 4 பேர் கைது..!

கோவை : கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் அஸ்லாம் (வயது 28) தொழில் அதிபர். இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன் காரில் பெங்களூரு சென்று விட்டு கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் கோவை அருகே எல். அண்டு .டி பைபாஸ் ரோட்டில் வந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென்று அவரது காரை வழிமறித்தது. இதனால் அஸ்லாம் காரை நிறுத்தினார். உடனே அந்த காரில் இருந்த கும்பல் கீழே இறங்கி வந்தனர்.காருக்குள் இருந்த தொழில் அதிபர் அஸ்லாமை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவருடைய காரில் பணம் தங்க நகைகள் இருக்கிறதா? என்று தேடிப் பார்த்தார்கள். ஆனால் காரில் எதுவும் இல்லை. அதனால் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் தப்பி சென்று விட்டது .இது குறித்து அஸ்லாம் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள் .மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு காரில் 7 மேற்பட்டவர்கள் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் வந்து சோதனை சாவடி அருகே அஸ்லாம் காரை மடக்கி தாக்கியதும் ,அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது .இதை தொடர்ந்து போலீசார் கேரளாவுக்கு சென்று அஸ்லாமை தாக்கிய சித்தூரைச் சேர்ந்த சிவதாஸ் ( வயது 29) ரமேஷ்பாபு வயது 37 அஜய்குமார் (வயது 24) விஷ்ணு (வயது 28) ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்..