சாத்தான்குளத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டதை விட கொடூரமாக தாக்கி சிறுவன் கோகுல் ஶ்ரீ அடித்துக்கொலை செய்துள்ளனர் என மக்கள் கண்காணிப்பாகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கோகுல் ஸ்ரீ அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும், அவரது தாயை கடத்திச் சென்று சித்தரவதை செய்யப்பட்டது தொடர்பாகவும் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா, மக்கள் கண்காணிப்பாகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், சிறுவன் கோகுல் ஶ்ரீ தாய் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, “இந்த படுகொலையை துவக்கம் முதலே ஒரு சில அதிகாரிகள் மறைக்க முயன்றதாகவும் ஆதாரங்களை அழிக்கவும் முயல்கின்றனர். முதலமைச்சர் தலையிட்ட பிறகு தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்தப் கொலைக்கு பிரதான காரணமாக இருந்த 5 பேர் வழக்கின் உள்ளே கொண்டுவரப்படவில்லை. காட்டுமிராண்டித்தனமாக சிறுவனை அடித்து, மிளகாய் பொடியை கண்ணில் போட்டு உள்ளனர். சிறுவனின் உடலில் 96 காயங்கள் இருந்துள்ளன. காலதாமதமாக தான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து இந்த வழக்கை முடிக்க வேண்டும். பிரதான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி செங்கல்பட்டில் கோரிக்கை முழக்க போராட்டம் நடத்த உள்ளோம்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய மக்கள் கண்காணிப்பாகம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், “சாத்தான்குளம் கொலை வழக்கில் 18 காயங்கள் தான் இருந்தது. ஆனால் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. கோகுல் ஸ்ரீ இறந்தபின் குண்டூசியை வைத்து உடம்பின் பல்வேறு இடங்களில் குத்தி பார்த்தும், கண்ணில் மிளகாய் பொடியை தூவியும் உயிரோடு உள்ளாரா என்று பார்த்துள்ளனர். வாயில் ஹைட்ரஜன் பராக்சைடு திரவத்தை ஊற்றியும், இப்படி பல்வேறு சித்தரவாதைகளை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் இடம் பெற்றுள்ளது” என்றார்.
மேலும், “டிசம்பர் 29ஆம் தேதி திருட்டு வழக்கில் தாம்பரம் ரயில்வே போலீசாரால் கோகுல் ஸ்ரீ கைது செய்யப்பட்டு 30ஆம் தேதி இரவு 8 மணி அளவில் செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பின் 31ஆம் தேதி சுமார் 4 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றதாகவும் சிறுவன் கோகுல் ஸ்ரீ உடலை அரசு மருத்துவர் சோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அன்று காலை 9 மணிக்கு ஆரம்பித்து மதியம் 2 மணி வரை அடித்துள்ளனர். அந்த சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பல கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் இருப்பதை அவன் பார்த்தானா அல்லது அந்த அதிகாரிகள் எந்த பெண்ணுடன் ஆவது தொடர்பில் இருந்ததை அவன் பார்த்தானா அதற்காக அவனை அடித்து கொன்றார்களா? 31 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் மருத்துவமனைக்கு மகன் கோகுல் ஸ்ரீ-யை பார்க்க சென்ற தாய் பிரியாவை மருத்துவமனை வாசலில் தடுத்து சிறுவர் சீர்திருத்த இல்லத்தைச் சேர்ந்த ஒரு நபர் உன் மகன் இறந்துவிட்டான் என்றும் உடலை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு ஏமாற்றி நிர்பந்தம் செய்து சிறுவன் சீர்திருத்த இல்லத்தில் பணி புரியும் சாந்தி வீட்டிற்கு கொண்டுச் சென்று அடைத்துள்ளனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த 2 தினமும் யாரிடமும் பேச அனுமதிக்காமல் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார். அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவக்குமார், சிறுவர் கூர்நோக்கு இல்ல அலுவலக மேலாளர் பாலாஜி, தலைமை காவலர் ஜெயராம் ஆகியோர் கூட்டாக இணைந்து வழக்கை திரும்ப பெறுமாறு கோகுல் ஶ்ரீயின் தாயார் பிரியாவை மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர். இவர்கள் மீது 4 முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் ஓய்வுப்பெற்ற நீதிபதியை வைத்து ஆய்வு மேற்கொள்வதை விரைப்படுத்த வேண்டும். கோகுல் ஸ்ரீ உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டும் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெறப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் 96 இடங்களில் கோகுல் ஸ்ரீ உடலில் காயங்கள் இருந்துள்ளன” எனக் கூறினார்.