தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது.
இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, ‘தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது’ எனத் தெரிவித்திருந்தார்.