சட்ட பிரிவுகளை மீறும் கடைகள், நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம்..!

சென்னை: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் சில திருத்தங்களை செய்வதற்காக தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்ட மசோதா ஒன்றை அறிமுகம் செய்தார்.

அந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை மீறினால், முதன்முறை மீறுதலுக்காக ரூ.5 ஆயிரமும், 3 ஆண்டுகளுக்குள் மீண்டும் விதிகளை மீறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அந்த சட்டத்தின் 41-ஏ பிரிவை மீறும் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட வேண்டும். அந்த பிரச்னையை இணக்கமாக தீர்த்த பின்னரும் அந்தத் தவறை தொடர்ந்து செய்தால் ஒவ்வொரு முறையும் ரூ.200 வரை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை மீறிவிடக் கூடாது. இந்த சட்டத்தின் 3-ம் பிரிவின் கீழ் செயல்படும் ஆய்வாளரை தடுக்கவோ அல்லது அவர் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்தாமல் இருந்தாலோ, ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். விதி மீறல்களை விசாரிப்பதற்காகவும், அபராதம் விதிப்பதற்காகவும் தொழிலாளர் நலத்துறையின் இணை ஆணையர் பதவிக்கு குறையாத ஒருவரை நியமிக்கலாம்.

விதி மீறலை விசாரிக்கும் அதிகாரி, யாரையும் சாட்சி அளிப்பதற்காகவோ, விசாரணைக்கு தேவைப்படும் ஆவணங்களை தாக்கல் செய்வதற்காகவோ சம்மன் அளிக்கலாம். விசாரணை அதிகாரியின் உத்தரவினால் பாதிக்கப்பட்ட யாரும், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து 60 நாட்களுக்குள் தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையரிடம் மேல்முறையீடு தாக்கல் செய்யலாம். அப்பீல் தாக்கல் செய்யப்பட்ட 60 நாட்களுக்குள் அதற்கான தீர்வை கூடுதல் ஆணையர் பிறப்பிக்க வேண்டும். வணிக சீர்திருத்த செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. அதனால் இந்த திருத்தங்களை மேற்கொள்ள இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.