வீட்டு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு… நீடிக்கும் டேங்கர் லாரி ஸ்டிரைக்.!

சென்னை: ”பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள்..

நேற்றைய தினம் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேஸ் சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த சமரச பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் பாட்டிலிங் நிலையங்களுக்கு, வீட்டு சமையல் கேஸ் கொண்டு செல்லும் பணிக்கு பல்க் LPG டேங்கர் லாரிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் பெற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் மூலம் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

ஒப்பந்தம் தொடர்பாக, எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் சில நிபந்தனைகள் தங்களுக்கு ஏற்புடையவையாக இல்லை என்று லாரி உரிமையாளர்கள் கூறியிருந்தனர்.

அதாவது, எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு, தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்த காலம் முடிவடையும் நிலையில், புதிய ஒப்பந்தம் ஏற்படுத்த, ஐ.ஓ.சி.எல்., நிறுவனம் நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், பயன்பாட்டில் உள்ள லாரிகளை குறைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், 21,000 கிலோ எடை கொண்ட மூன்று அச்சுக்களை கொண்ட லாரிகளாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்குதான் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பழைய லாரிகளை குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே இருந்த நடைமுறையை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.. இதை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்காத நிலையில், டேங்கர் லாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

2025 – 2030ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தத்தில் இருக்கும் கடுமையான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அவைகள் தளர்த்தப்படவில்லை. நஷ்டத்திற்காக லாரிகளை ஓட்ட முடியாது என்பதால், 10 இடங்களில் கேஸ் ஏற்றும் இடங்களில் லோடு ஏற்றாமல் லாரிகள் நிறுத்தப்படும் என்று டேங்கர் லாரிகள் சங்கம் அறிவித்துவிட்டன.

அந்தவகையில் நேற்று முதல், 4000 LPG டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.. தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் 28ம் தேதி முதல் (நேற்று) வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.

இதுகுறித்து தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுந்தரராஜன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, “கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கி உள்ளோம். இதனால், 4,000 காஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

போராட்டம் காரணமாக மங்களூரு, பாலக்காடு, கொச்சி உள்ளிட்ட, 11 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தும் கேஸ் ஏற்றி செல்லும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அழைத்துள்ளனர். உடன்பாடு ஏற்பட்டால், போராட்டத்தை விலக்கி கொள்வோம். இல்லாவிட்டால், எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்” என்று அறிவித்துள்ளார்.

கோவையிலும், ஐஓசி, பிபிசி, எச்பிசிஎல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. சிலிண்டர் பாட்டிலிங் நிலையங்களுக்கு சிலிண்டர் எடுத்துச்செல்வதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் எரிவாயு கொண்டு செல்லும் பணிகளும் முடங்கியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.