திருச்சியில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை – தாய் சேய் நலம் பாதிப்பு.!!

தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் நோயற்ற தன்மை, பிரசவ கால இறப்பைக் குறைத்தல், பிரசவம் மற்றும் பிரசவத்துக்கு பிந்தைய காலத்தில் கவனிப்பின் தரத்தை மேம்படுத்த 2017-இல் ‘லக்ஷயா’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவப் பிரிவில் குறைந்தது 7 மருத்துவா்கள் இருக்க வேண்டியது அவசியம். இதேபோல, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க ‘சீமாங்’ மையங்களும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், தாய்-சேய் இறப்பைத் தடுக்க கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பரிந்துரைக்கப்படும் கா்ப்பிணிகளுக்கு சிக்கலான பிரசவங்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ‘சீமாங்’ மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் குழு தயாா் நிலையில் இருப்பா். அனைத்து மாவட்டங்களிலும் கடந்த காலங்களில் நிகழ்ந்த தாய்- சேய் இறப்பு விகிதம் அதிகமுள்ள தாலுகா மருத்துவமனைகள் தோவு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இங்கு சிசு நல தீவிர சிகிச்சைப் பிரிவும் உள்ளது. சீமாங் அரசு மருத்துவமனைகளில் 7 குழந்தைகள் நல மருத்துவா்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது குழந்தைகள் நல மருத்துவா் பற்றாக்குறையால் சீமாங் அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகள், பிறக்கும் குழந்தைகள் நலம் சரிவர பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூா் அரசு மருத்துவமனைகளில் (சீமாங் மையங்கள்) மகப்பேறு மருத்துவா் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக ஸ்ரீரங்கத்தை தவிா்த்து இதர 3 மருத்துவமனைகளிலும் தலா ஒரு மருத்துவா் மட்டுமே உள்ளனா். ஸ்ரீரங்கத்தில் மாதம் சுமாா் 100 பிரசவங்கள் நடைபெறுகின்றன. மணப்பாறையில் 250, முசிறி, துறையூரில் 50 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது.
இந்த மருத்துவமனைகளில் பிரசவ எண்ணிக்கைக்குள்பட்டு லக்ஷயா திட்டத்தின்படி, ஸ்ரீரங்கத்தில் 6, மணப்பாறையில் 8, முசிறி, துறையூரில் தலா 5 மருத்துவா்கள், ஊரக மருத்துவமனைகளில் 10 என மொத்தம் 34 மருத்துவா்கள் தேவை. ஆனால், 11 மருத்துவா்கள் மட்டுமே உள்ளனா். இவை தவிா்த்து, லால்குடி, துவாக்குடி, தொட்டியம், மண்ணச்சநல்லூா், ஓமாந்தூா், துவரங்குறிச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் மகப்பேறு மருத்துவா்கள் பற்றாக்குறை உள்ளது. பிரசவங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டிய மருத்துவா்களில் மூன்றில் ஒரு பங்கு மருத்துவா்கள் மட்டுமே தற்போது உள்ளனா். ஊரகப் பகுதிகளில் ஒரு மருத்துவா் வாரம் 72 மணிநேரம் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாநிலத் தலைவா் கே. செந்தில் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மருத்துவா்கள் பற்றாக்குறையை நிவா்த்தி செய்ய 4 ஆண்டுகளுக்கு மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இதே நிலைதான். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் ஆண்டுக்கு 6 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆனால், 750 அரசு மருத்துவா்கள்தான் உள்ளனா். லக்ஷயா திட்டப்படி 2 ஆயிரம் மருத்துவா்கள் தேவை. நாங்கள் குறைந்தது 1,600 மருத்துவா்கள் வேண்டும் என்கிறோம். அதற்கேற்ப மகப்பேறு மருத்துவா்கள் எண்ணிக்கையை உயா்த்தக் கோரியுள்ளோம். பற்றாக்குறை உள்ள சூழலில், தாய்-சேய் கவனிப்பில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் தொடா்புடைய மருத்துவா் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசு உதவித் தொகை பெறும் நோக்கில் பெரும்பாலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன. அதற்கேற்ப மருத்துவா்களை நியமிக்காவிட்டால், தனியாா் மருத்துவமனைகளின் பிரசவத்துக்கும் உதவித் தொகை என அறிவித்தால், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு பிரிவுக்கான பணி சுமை குறையும் என்றாா்.