கோவை மாநகராட்சி வார்டுகளில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சாலை ஓரங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி குப்பை கொட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சிங்காநல்லூர் 58-வது வார்டு பகுதியில் தனியார் சலூன் கடை ஒன்று கடையில் உள்ள முடிகள் மற்றும் அபாயகரமா கழிவுகள் உள்ளிட்டவற்றை சாலையில் கொட்டி உள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த சலூன் கடை உரிமையாளருக்கு ரூ. 2000 அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளிடம் சாலைகளில் குப்பை கொட்ட கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலையில் திடக்கழிவு மேலாண்மை விதிகளை மீறி குப்பைகளை கொட்டினால் ரூ. 2000 முதல் ரூ.5 ஆயிரம் வரை எந்த ஒரு பாரபட்சம் இன்றி விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர வார்டு வாரியாக குப்பைகளை தரம் பிரித்து வாங்குவதற்கு விரைவில் பேட்டரி வாகனங்கள் வர உள்ளன.