பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சு.. ராகுலுக்கு 2 ஆண்டு சிறை – முழு விவரம் இதுதான்..!

ந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி திடீரென நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் அனைத்து திருடர்களுக்கும் மோடி பெயர் இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இதுகுறித்து ராகுல் காந்தியின் இந்த பேச்சு குறித்து நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாகக் கூறப்படும் அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுப்பெயராக இருப்பது எப்படி” என்று பேசினார்.

இந்த அவமதிப்பு வழக்குக்கு தான் தீர்ப்பு வந்துள்ளது. இத்தீர்ப்பு வெளியானபோது ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்தார். 10,000 ஜாமீன் பத்திரத்தை செலுத்தி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து எம்.பி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றார். தற்போது எம்.பி.யாக இருப்பதால், அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட மாட்டார் என்றும், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி மீது குஜராத் அமைச்சர் பூர்ணேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். ராகுல் காந்தியை நேரில் ஆஜராகக் கோரிய புகாரின் மனு மீதான விசாரணைக்கு குஜராத் உயர் நீதிமன்றம் மார்ச் 2022 இல் விதித்த இடைக்காலத் தடையை நீக்கிய பின்னர் பிப்ரவரி 2023 இல் இந்த வழக்கின் இறுதி வாதங்கள் மீண்டும் தொடங்கியது. சிஆர்பிசியின் 202வது பிரிவின் கீழ் உள்ள சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாததால், இந்த நடவடிக்கை ஆரம்பத்திலிருந்தே குறைபாடுடையது என்று ராகுல் காந்தியின் வழக்கறிஞர் வாதிட்டார்.

ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. பிரிவுகள் 499 மற்றும் 500-ன் கீழ், இரண்டு ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய எளிய சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது..