மதுரை: தமிழகத்தில் வரும் 20-ம் தேதி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், போராட்டத்தில் ஈடுபடுவதால் அன்றைய நாளில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவு சிறு, குறு தொழில் நிறுனங்கள் அமையப்பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கரோனாவுக்கு பிறகே சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெரியளவில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டதால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. இதுதொடர்பாக சிறு, தொழில் நிறுவன அமைப்பு பிரதிநிதிகள் முதல்வர், துறை அமைச்சரிடம், “மின் கட்டணங்களை குறைத்தால் மட்டுமே சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்க முடியும்,” என முறையிட்டனர்.
ஆனால், இந்த கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் வரும் 20-ம் தேதி சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம் மற்றும் அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஒரு நாள் உற்பத்தி நிறுத்தத்தால் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி உற்பத்தி, வர்த்தகம் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து மதுரை மடீட்சியா சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் நிறுவன தலைவர் எம்.எஸ்.சம்பத் கூறியதாவது: “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின்சார வாரியம் ஒரு எச்பி-க்கு ரூ.150 என்ற முறையில் “பிக்ஸடு சார்ஜ்” உயர்த்தி உள்ளனர். சிறு, தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில் அனைத்து தொழில்களும் 12 மாதங்களும் நடக்காது.
3 மாதங்கள் மட்டுமே செயல்படும் நிறுவனங்களும் உள்ளன. குறிப்பாக மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் மாம்பழங்கள் உற்பத்தியாகும் அந்த மூன்று மாதங்கள் மட்டுமே செயல்படும். மற்ற 9 மாதங்களில் பூட்டிக் கிடக்கும். அந்த 9 மாதங்களுக்கும் சேர்த்து பிக்ஸடு சார்ஜ் மின் கட்டணம் செலுத்த வேண்டும். தொழில் நிறுனங்களுக்கு காலை 6 மணி முதல் 10 வரையும், மாலை 6 மணி முதல் இரவு 10 வரையும் இடைப்பட்ட காலத்தை “பீக் அவர்” என மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.
இந்த நேரத்தில் மின்சாரத்தை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறமோ, அதில் 25 சதவீத்தை கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கிறார்கள். இதில், ஒரு சிப்ட் நடத்தும் நிறைய தொழில் நிறுவனங்கள் பீக் அவரில் மின்சாரத்தை பயன்படுத்தி இருக்க மாட்டார்கள். 5 மணி, 6 மணிக்கே மூடிவிடுவார்கள்.
தற்போது பீக் அவரில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கூடுதலாக நிர்ணயித்த 25 சதவீதத்தை 15 சதவீதமாக குறைபதாக அரசு கூறியிருந்தாலும், பீக் அவரில் பயன்படுத்தும் மின் அளவினை பதிவு செய்வதற்கு டிஓடி (TOD) மீட்டர் தமிழ்நாடு மின்வாரியம் நிறுவுகின்ற வரை 10 சதவீதம் குறைப்பு கட்டணம் கிடைக்காது எனக்கூறுகின்றனர். அதனால், “பீக்அவர் சார்ஜ்” அதிகமாக இருக்கிறது. பிக்ஸடு சார்ஜ் அதிகமானதால் மின் இணைப்பை ஒப்படைக்க முடிவு செய்தாலும் ரூ.2 லட்சம், ரூ.3 லட்சம் கேட்கிறார்கள்.
அரசு நிரந்தரமாக தொழில் நிறுவனங்களிடம் இருந்து வருமானம் வர வேண்டும் என்று நினைக்கிறது. ஆனால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறதா பாதிக்கப்படவில்லையா? என்பதை பற்றி அவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பெற்றாமல் மட்டுமே தொழில் துறையினர் செயல்பட முடியும். கரோனாவுக்கு பிறகு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்பை பற்றியும், அதை சரி செய்வதற்கும் அரசு கேட்டு கொண்டதிற்கு ஏற்ப ஐஏஎஸ் அதிகாரி குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
ஆனால், இந்த அறிக்கை தற்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை. கேரளாவில் முதல் மூன்று ஆண்டிற்கு புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு எந்த அரசு துறையிடமும் அனுமதி வாங்க தேவையில்லை. இப்படி அனைத்து மாநிலங்களும் தொழில்துறையை மேம்படுத்த இணக்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் எந்த வகையிலும் தொழிற்சாலைகளுக்கு மின் கொள்கை சாதகமாக இல்லை.
விவசாயத்தில் மின்சாரம் கட்டணம் செலுத்தி உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாது. இப்படியே தமிழகம் சென்று கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் விவசாயம் போன்ற நெருக்கடியான சூழல் தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்டுவிடும்” என்று சம்பத் கூறினார்.
சம்பத் மேலும் கூறுகையில், “தொழில்துறையின் இந்தியாவின் முக்கிய போட்டியாளர் சீனாதான். சீனாவைதான் உலகத்தின் தொழிற்சாலை என்கிறார்கள். உலகத்திற்கு தேவையான மூலப்பொருட்களை அந்த நாடுதான் தயாரித்து கொடுக்கிறார்கள். இந்தியாவிலும் சீனாவின் உற்படுத்தி பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதற்கு அவர்களுடைய மூலப்பொருட்கள், இந்திரங்கள் விலை மிக குறைவாக உள்ளது.
சீனாவில் தொழிற்சாலைகளுக்கு நிலத்தை குத்தகைக்குதான் கொடுப்பார்கள். அதற்கு விலை குறைவு என்பதால் நிலத்திற்காக தொழில்துறையினர் அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்தியாவில் ஒரு தொழில்முனைவோர் ரூ. 4 கோடி முதலீடு செய்வதாக இருந்தால் கட்டிடத்திற்கும், நிலத்திற்கும் மட்டுமே ரூ.2 கோடி செலவிட வேண்டும். ஆனால், சீனாவில் அந்த ரூ. 2 கோடி முதலீடு தேவையில்லை.
கட்டமைப்பு வசதிகளை அரசே கொடுத்துவிடும். இயந்திரத்தை பொருத்தி உற்பதி செய்ய ஆரம்பித்துவிடலாம். அந்த மாதிரி தொழில் முனைவோருடன் தமிழக அரசு இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும். 1980ம் ஆண்டில் இந்தியாவும், சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஒன்றுதான். பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால், இந்தியாவை விட 6 மடங்கு சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது” என்று சம்பத் கூறினார்.