தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கோவை சரவணம்பட்டி சேரன் மாநகர் விளாங்குறிச்சி சாலையில் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது. மேலும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த காளப்பட்டியைச் சேர்ந்த சபரி ராஜனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காளப்பட்டியைச் சேர்ந்த பாபு மற்றும் விற்பனையாளர் கோபாலன் என்பவர் உதவியுடன் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி கார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.