கோவை : ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா அரிசியை வாங்கி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஜனனி பிரியா ( கோவை) சுரேஷ்குமார் (ஈரோடு) இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் கண்ணன், சுரேஷ்குமார், துளசி மணி மற்றும் போலீசார் பொள்ளாச்சி, ஆனைமலை, வாளையார், மதுக்கரை ஆகிய பகுதிகளில் திடீர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்றரை டன் ரேஷன் அரிசியும் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல ஒண்டிப்புதூரில் குடிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தவ மூர்த்தி ( வயது 27) அதே பகுதியைச் சேர்ந்த பாலு ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி செலக்கரிசலில் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர் நடராஜ் என்பவருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தவமூர்த்தி ,பாலு நடராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 15 டன் ரேஷன் அரிசி, சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.