ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது வாகனத்தில் மூட்டை மூட்டையாக 300 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இது குறித்து சரக்கு வாகனத்தில் வந்த கர்நாடக மாநிலம் நரசிபுரா பகுதியைச் சேர்ந்த முஷவீர் பாஷா(26), சதாம் உசேன்(30) ஆகிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் இருவரும் சேர்ந்து தாளவாடி மலைப்பகுதி கிராமங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கூடுதல் விலைக்கு விற்க கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தையும், ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து ஈரோடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.