கோவை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது இரவு – பகலாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நேற்று அந்த பகுதியில் தீவிர சோதனை நடத்தி வந்தனர் .அப்போது செட்டிபாளையம் ரோடு, அவ்வை நகரை சேர்ந்த காஜா மைதீன் (வயது 45) வெள்ளலூரை சேர்ந்த சுரேஷ் (வயது 45) வாளையாரை சேர்ந்த பாக்யராஜ் (வயது 34) ஆகியோர் 3 மோட்டார் சைக்கிள்களில் 2 ஆயிரத்து 625 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்று விற்க முயன்றது தெரிய வந்தது.. இது தொடர்பாக ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காஜா மொய்தீன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பாக்யராஜ் தப்பி ஓடிவிட்டார் அவரை தேடி வருகிறார்கள்.
இதேபோல குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கவுண்டம்பாளையம் மதன் தினேஷ், கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அப்சல் (வயது 34 )சனுப் ஆகியோர் சரக்கு வாகனத்தில் 3 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. சரக்கு வாகனம் – ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்சல் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள். மேலும் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி, செந்தூர் கார்டன் சிட்டி அருகே குஞ்சிபாளையத்தைச் சேர்ந்த நவீன் அவரது தம்பி கனகராஜ் ஆகியோர் சரக்கு வாகனத்தில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 ஆயிரம் கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்..