டாட்டூ அதாவது உடலில் பச்சை குத்துவது பல வருடங்களாக நம்மூரில் இருக்கும் பழக்கங்களில் ஒன்று தான். வெளிநாடுகளிலும் இந்த பழக்கம் உள்ளது .கடந்த சில வருடங்களாக அந்த பழக்கம் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கிறது.
ஃபேஷன் என்ற பெயரில் டாட்டூ குத்திக்கொண்டு தங்களுடைய உடல் அமைப்பே மாற்றிக்கொள்ளும் விபரீத செயல்களில் பலர் ஈடுபடுகின்றனர்.
அதிலும் ஏலியன் டாட்டூ அதாவது வேற்று கிரகவாசிகள் போல் தங்களது தோற்றத்தை ஏற்படுத்துகிறேன் என நாக்கை இரண்டாக வெட்டிக்கொள்வது, மூக்கில் துளை இட்டுக்கொள்வது, கண்களின் நிறங்களை மாற்றிக்கொள்வது. உடலில் உள்ள ரோமங்களை எல்லாம் முழுவதுமாக அகற்றிவிட்டு உடல் முழுவதும் டாட்டூக்களை போட்டுக்கொள்வது என பலர் விநோதமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற வீடியோக்களை பார்க்கும்இளைஞர்கள் சிலர் இதில் ஆர்வம் கொண்டு அவர்களும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
திருச்சியை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் டாட்டூ போட்டுக்கொள்வதில் கொண்ட ஆர்வத்தால் பல விபரீத முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். தற்போது அதுவே அவருக்கு வினையாக வந்து முடிந்துள்ளது. இந்த இளைஞர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே “ஏலியன் எமோ டாட்டூ” என்கிற பெயரில் உடலில் பச்சை குத்தும் கடை நடத்தி வருகிறார். இங்கு வாடிக்கையாளர்களின் உடலில் வித்தியாசமாக டாட்டூ வரைவது உள்ளிட்டவற்றை ஹரிஹரன் செய்து வந்தார்.
இந்நிலையில் ஹரிஹரனுக்கு ஏலியன் டாட்டூ மீது மோகம் ஏற்பட்டது. இந்த இளைஞர் சமீபத்தில் கூட தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு ஏலியன் டாட்டூ குறித்தும் அதற்காக தான் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து பேசி இருந்தார். இந்த இளைஞர் ஏலியன் தோற்றம் வேண்டும் என்பதற்காக தனது நாக்கை இரண்டாக பிளந்துக்கொண்டார். டங் ஸ்பிலிட் (Tongue Split) அதாவது பாம்புக்கு எப்படி நாக்கு இருக்குமோ அதுபோல் அமைத்துக்கொள்வது. இதற்காக மும்பை சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதற்காக பல லட்சங்களை செலவு செய்துள்ளார்.
இந்த சிகிச்சை முடிந்த பின்னர் பேசுவதற்கு சிரமமாக இருந்ததாகவும் தொடர்ந்து பயிற்சி செய்ததால் தற்போது சரளமாக பேசுவதாக தெரிவித்திருந்தார். தனது கண்களையும் நீல நிறமாக மாற்றியுள்ளார். இதற்காக சில நிறமிகளை கொண்டு கண்களின் வெள்ளைப்படலத்தை நீல நிறமாக மாற்றி உள்ளார். டாட்டூமீது கொண்ட காதலாலும் தனது தொழிலுக்கு இதுதேவை எனக் கூறி தனது கருத்தை நியாயப்படுத்தி இருந்தார்.
இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். தன் உடலில் அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த அப்டேட்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு அதை விளம்பரப்படுத்தி வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அந்த இளைஞர் வெளியிட்ட வீடியோ ஒன்று அவருக்கு விணையாக முடிந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் தனது நண்பர் ஒருவருக்கு தனது கடையில் வைத்து உரிய நாக்கை அறுவை சிகிச்சை செய்து இரண்டாக பிளந்து, பச்சை குத்தி நிறத்தை மாற்றியுள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வெளியானதில் இருந்தே சமூக வலைத்தளத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியது.இந்த இளைஞர் என்ன பயிற்சி பெற்ற மருத்துவரா? இவ்வாறு செய்வதற்கு யார் இவருக்கு அனுமதி கொடுத்தது. இது பல இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கவலை தெரிவித்தனர்.
மருத்துவ கட்டுப்பாட்டை மீறி இயற்கைக்கு புறம்பாக உடல் மாற்ற கலாசாரம் என்ற பெயரில் மருத்துவம் படிக்காமலேயே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றம் என்பதால் இதைப்பார்த்த சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து திருச்சி மாநகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது,அவர் நாக்கை பிளவுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து ஹரிஹரன், ஜெயராமன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட அவருடைய டாட்டூ கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.