எஸ்.என்.எஸ். கல்லூரி மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் – சிறுவன் உள்பட 6 பேர் கைது..!

கோவை சரணம் பட்டி பக்கம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் எஸ். என். எஸ். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகள், விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் அறையில் தங்கியிருக்கும் சக மாணவர்கள் சிலர் அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவன் பிரவீன் என்பவரின் செல்போனை பறித்தனர் .இது குறித்து பிரவீன் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் தீபக் என்பவரிடம் தெரிவித்தார். தீபக் செல்போனை பறித்த மாணவர்களை தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் நேரில் வந்தால் செல்போனை தந்து விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய தீபக் அந்த மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு தனது நண்பர்களான லோகேஷ், பிரவீன், ஆகியோருடன் சென்றார். ஆனால் அவர்கள் செல்போனை திருப்பிக் கொடுக்காமல் தீபக் லோகேஷ் பிரவீன் ஆகிய 3 பேரையும் தாக்கினார்கள் .இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தீபக் அந்த கல்லூரிக்கு தொடர்பு இல்லாத வெளி ஆளான லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தொடர்பு கொண்டு தங்களை தாக்கியவர்களை திருப்பி தாக்க வேண்டும் என்றார். இதனையடுத்து பிரதீப் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வெற்றிவேல் தங்கி இருக்கும் அறைக்கு சென்றார். அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி வெற்றிவேல் மற்றும் அவரது நண்பர்களை தாக்கி மிரட்டினார்கள். இதனால் அச்சமடைந்த அவர்கள் அறைக்குள் ஓடிச் சென்று கதவை பூட்டிக் கொண்டனர். இதற்கிடையே சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர்களை தாக்கியது கோவை கொண்டயம்பாளையம் லட்சுமி கார்டன் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 20 )வர தரயங்கரபாளையம்ஜெர்மன்ராஜேஷ் ( வயது 24 )காபி கடை பகுதியைசேர்ந்த சந்தோஷ் (வயது 25) அன்னூர் கணேசபுரம் ராகுல் (வயது 19) தீபக் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.