பருவமழை முடியும் வரை சிறப்பு காய்ச்சல் முகாம்கள் செயல்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

காய்ச்சலுக்காக தொடங்கப்பட்ட சிறப்பு முகாம்கள் பருவமழை முடியும் வரை செயல்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடக்கலாம் வாங்க கோரிக்கை மனுக்களை தாங்க’ என்னும் பெயரில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அதிகாலை நடைபயிற்சி செல்லும் போது, பொதுமக்களை அவர்களது இல்லம் தேடி சென்று கோரிக்கை மனுக்களை பெறும் நடவடிக்கையில் அமைச்சர் மா.சுபிரமணியன் ஈடுபட்டார். தரமணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் அவர், பொதுமக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார். மேலும் அப்பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஒவ்வொரு பகுதியாக நடந்து சென்று பொது மக்களை நேரில் சந்தித்து அப்பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கும் அடிப்படை வசதி பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பணி நடைபெற்று வருவதாகவும் நடை பயிற்சி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த நடைபயிற்சியின் போது தமிழக அரசின் அனைத்து சேவை துறை அதிகாரிகளும் உடன் வருவதால் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த பணிகளும் விரைவில் நிறைவடையும் என தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து விட்டதாகவும் வருகின்ற பருவமழையின் போது சைதாப்பேட்டை பகுதியில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாது எனவும் விளக்கமளித்தார்.

பருவ மழை தொடங்க உள்ள நிலையில் காய்ச்சல் முகாம்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஏற்கனவே எச் 1 என்1 காய்ச்சல் பரவ தொடங்கிய போதே, தமிழகம் முழுவதும் ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த காய்ச்சல் முகாம்கள் தற்போதும் தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறினார். பருவ மழை முடியும் வரை இந்த சிறப்பு காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

எச் 1 என் 1 இன்புளுயன்சா தொற்று பள்ளி குழந்தைகளை தாக்குவதால் அனைத்து பள்ளிகளிலும் முதலமைச்சர் வழங்கிய 389 சிறப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்