குற்றச் செயல்களை குறைக்க ட்ரோன் மூலம் கண்காணிக்கும் சென்னை காவல் சிறப்பு படை.!!

சென்னை: சென்னை காவல் துறையில் புதிதாக ‘ட்ரோன் சிறப்பு படை’ உருவாக்கப்பட்டுள்ளது. அடையாறு, அருணாசலபுரம், முத்து லட்சுமி பார்க் அருகே இதற்காக தனிப் பிரிவு அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன் பிரிவைச் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று காலை தொடங்கி வைத்தார். ‘இத்திட்டம் ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் உள்ள ட்ரோன்களை 5 கி.மீ. தொலைவு வரை இயக்க முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் ட்ரோன்களில் உள்ளது.

இதன்மூலம் பண்டிகை மற்றும் கூட்டம் நிறைந்த நிகழ்வுகளில் கூட்டத்தின் அளவை துல்லியமாக நிர்ணயிக்க முடியும். மேலும், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான யுக்திகளையும் மேற்கொள்ள இயலும். பகல் மற்றும் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டத்தையும், திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும் வானத்திலிருந்து கண்காணித்து விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கவும் முடியும்.அதுமட்டும் அல்லாமல் சாலையில் செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாகக் கண்காணித்து குற்றத்தில் ஈடுபடும் வாகனங்களை வகைப்படுத்தி தக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும்,குற்றவாளிகளை தேடும் பணியிலும் இதை ஈடுபடுத்த முடியும்’ என ட்ரோன்களின் சிறப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் போது டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவல் துறையை நவீனமயமாக்க வேண்டும் என்பது முதல்வரின் கனவுத் திட்டமாக உள்ளது. அதற்கு 2 விதமான திட்டங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார். ஒன்று தொழில்நுட்பம். காவல் துறை எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும்.

எனவே, தொழில்நுட்பத்தை மேன்மைப்படுத்த வேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவை நம்பிய தொழில்நுட்பத்தை காவல் துறையில் அறிமுகப்படுத்த வேண்டும். அடுத்து காவல் துறையினர் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் கடந்தாண்டு காவல் துறை மானியக் கோரிக்கையின்போது ட்ரோன் போலீஸ் யூனிட் என்ற திட்டத்தை அறிவித்தார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் 9 ட்ரோன்களை கொண்ட புது அமைப்பு காவல் துறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதில், 3 விதமான ட்ரோன்கள் உள்ளன. மெரினா உள்ளிட்ட கடலில் மூழ்குபவர்களைக் காப்பாற்றும்போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை ட்ரோன் மூலம் வழங்கி உதவ முடியும். அவசரக் காலத்தில் குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், தொலை தூரத்தில் உள்ள இடங்களுக்குச் சென்று பயன்படும் வகையிலும் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே ஒரு முன்னோடி திட்டமாகச் சென்னையில் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் குற்றங்கள் குறைக்கப்படும். குற்றங்கள் நடைபெற்றால் அதை உடனடியாக கண்டுபிடிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். கூடுதல் டிஜிபி வினித் வான்கடே தலைமையில் விபத்துகளைக் குறைக்க சிறப்புப் படை தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), லோகநாதன் (தலைமையிடம்), இணை ஆணையர் சிபி சக்கர வர்த்தி (தெற்கு மண்டலம்), அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.