நாளை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்..!

சேலம்: பருவ கால நோய்களைக் தடுக்க தமிழகம் முழுவதும் நாளை ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகள் துவக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதன்படி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுவதற்கான பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.

சுற்றுலாதுறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய பணிகளை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, சேலம் அரசு மருத்துவமனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த அரசு மருத்துவமனை அசாதாரண வளர்ச்சி பெற்றுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே இருந்த பெட் சிடி ஸ்கேன் தற்போது கூடுதலாக சேலம், கோவை, நெல்லை உள்பட 5 இடங்களில் நிறுவப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதத்தில் சேலத்தில் மட்டும் 1297 பேர் பெட் சிடி ஸ்கேன் மூலம் புற்றுநோய் பரிசோதனை செய்துள்ளனர். தற்போது புதிதாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ள கட்டடம் 12 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3.5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள கட்டடங்கள் விபரங்களையும் அவர் பட்டியலிட்டார்.

தமிழகத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 3000 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களில் தற்போது வரை 1100 கட்டடங்கள் புதிதாக கட்டி திறக்கப்பட்டுள்ளது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை பாராட்டி ஐ.நா தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு விருது விழங்கி உள்ளது.

உலகிலேயே மக்களை தேடி மருத்துவத்துறையே நேரில் சென்று மருத்துவம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டை தவிர எங்கும் இல்லை. இத்திட்டத்தில் 1.95 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர்.

அரசு அதிகாரிகள் யாரும் போகாத மலைக்கிராமத்தில் கூட மக்களை தேடி மருத்துவம் திட்ட பயனாளிகள் உள்ளனர்.

ஐ.நா. இந்த திட்டத்தை சும்மா ஒன்றும் அங்கீகரிக்கவில்லை என்றும் பெருமையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம், இந்த ஆண்டில் மழை கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் கூடுதலாக பெய்யும் என்பதால் முன்னேச்சரிக்கையாக அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

எந்த கிராமத்தில் ஒருவருக்கு காய்ச்சல் என்றால் உடனடியாக அங்கு மருத்துவமுகாம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மழைக்கால சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் 1000 இடங்களில் நாளை நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருவது குறித்தும் வலி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதால் வலி மாத்திரையின் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவலின் அடிப்படையில் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

மேலும் ஆன்லைன் மூலம் வலிமாத்திரை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பொதுமக்கள் இதுகுறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார்.