அமைச்சர் செந்தில் பாலாஜி நலம் பெற வேண்டி திமுகவினர் கோயிலில் சிறப்புப் பூஜை..!

ரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி நலம் பெற வேண்டி திமுகவினர் கோயிலில் சிறப்புப் பூஜையில் ஈடுபட்டனர்.

அமலாக்கத் துறை சோதனையைத் தொடர்ந்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி புதன்கிழமை நள்ளிரவு 2.15 மணியளவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி பூரண குணமடைய வேண்டி வழக்கறிஞர் கோபால் என்பவர் தலைமையில் திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கரூர் பிரம்ம தீர்த்தம் சாலையில் உள்ள வராஹி அம்மன் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.