வேலுார்: ”வயநாடு நிலச்சரிவுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம் கனிம வளங்களை எடுத்தது தான் காரணம் என கேரளா கூறுவது, பூகோளம் தெரியாத பேச்சு,” என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில், 20 புதிய பஸ்களை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.
அப்போது நிருபர்கள் அவரிடம், ‘வயநாடு நிலச்சரிவு விபத்திற்கு, தமிழகம் தான் காரணம். மேற்கு தொடர்ச்சி மலைகளில், தமிழகத்தில் கனிம வளம் எடுத்து விட்டனர் என, கேரள அரசு கூறுகிறதே… மேகதாது பிரச்னையில் அமைச்சர்கள் கையூட்டு வாங்கி விட்டதாக அண்ணாமலை கூறுகிறாரே’ என, கேள்வி எழுப்பினர்.கேள்விகளுக்கு பதிலளித்து, அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது: தொடை மேல் அடித்தால், வாய் வலிக்கிறது என்பது போல, பூகோளம் தெரியாமல், கேரளா அரசு பேசுகிறது. வயநாடு விவகாரம் பேரிடர்.
இருதயம் உள்ளவர்களை எல்லாம் உருக வைத்து, அழ வைத்து விட்டது. அதை கூட, பேரிடராக அறிவிக்க மாட்டோம் என, மத்திய அரசு கூறுவது, அவர்கள் இதயத்தில் இருப்பது இதயமா, கல்லா என தெரியவில்லை. மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பது வரவேற்கத்தக்கது. அண்ணாமலை விவரமே இல்லாத ஒருவர். இவ்வாறு கூறினார்.