இலங்கையின் தொடர் அத்துமீறல்… ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்.!!

ராமேஸ்வரம்: இலங்கை நீதிமன்றத்தால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதைக் கண்டித்தும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று காலை முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள பகுதிகளில் மீனவர்கள் பிடித்தாலும் அத்துமீறிவிட்டதாக இலங்கை கடற்படை தாக்கி கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீனவர்களின் வேதனை குமுறல்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அடுத்தடுத்து இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனையும், படகோட்டிகளுக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து வருகிறது, சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் சிங்கள கைதிகளுடன் வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொடூரமும் நிகழ்ந்துள்ளது.இலங்கையின் இந்த அத்துமீறல்களைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுடைய படகுகளில் கறுப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கடந்த 20-ந் தேதி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக நடைபயணத்தையும் ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்; இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் சாகும் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.முன்னதாக இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்றும் இன்றும் நடைபெற்றது. கச்சத்தீவில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் அந்தோணியார் தேவாலய திருவிழா நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவையும் தமிழ்நாட்டு மீனவர்கள் இந்த ஆண்டு புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.