இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்..!

விருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ.மேகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (53). இவர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மலையடிப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் மோகன்ராஜ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 23-ம் தேதி இரவு பணியிலிருந்த மோகன்ராஜ் மதுபோதையில் காவல் நிலையத்தில் பாரா பணியில் இருந்த பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றார். இதுகுறித்து பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜ் உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்றது, பணியின்போது மது அருந்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக எஸ்.எஸ்.ஐ. மோகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். மேலும் மோகன்ராஜ் மீது துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.