சென்னை: பாஜகவுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்?
இரட்டை வேடம் போடும் திமுகவும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பாஜகவும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும்.
ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். நிபந்தனைகளின் அடிப்படையில்தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தரமுடியும் என்று கூறுவது ஏற்கக்கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன. இதில், சுமார் 20 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் பங்குபெற்ற திமுக, தற்போதும் கனிசமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கையில் வைத்திருக்கும் திமுக, மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற முயற்சிக்காமல், நீட் பிரச்சனையைப் போல, கல்விப் பிரச்சனையிலும் கபட நாடகம் ஆடுகிறது.
‘ஒரே வார்த்தையில் அழைத்தோம் – மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன் ? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட திரு. ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு முதல் தவணையை இதுவரை விடுவிக்காததால், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையும், ‘கல்வி உரிமைச் சட்டம்’ (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை’
என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும்; திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக்கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோல் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.