ஸ்டாலின் கைகாட்டுபவரே பிரதமராக வர வேண்டும் – அமைச்சர் உதயநிதி பேச்சு.!!

சென்னை: ”முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ, அவரே பிரதமராக வர வேண்டும்; அதற்கு, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்,” என, அமைச்சர் உதயநிதி பேசினார்.கடலுார், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளை சேர்ந்த தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு முன்னிலையில், நேற்று சென்னை அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி பேசியதாவது:சேலத்தில் இளைஞரணி மாநாடு வெற்றிகரமாக முடிந்து விட்டது. ஆனாலும், தி.மு.க.,வின் பணி இன்னும் முடியவில்லை. ஏப்ரல் மாதத்தில், லோக்சபா தேர்தல் நடக்கும் என தெரிகிறது. வரும், 2024 லோக்சபா தேர்தலில், 40க்கு 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாக வேண்டும்.லோக்சபா தேர்தலுக்கு இன்னும், 60 – 65 நாட்கள் தான் உள்ளன.
ராமநாதபுரம், கடலுாரில் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கடந்த, 2019 லோக்சபா தேர்தலை விட, வரும் தேர்தல் மிக மிக முக்கியம். தமிழக அரசுக்கு நிதி கேட்டால், பா.ஜ., அரசு கொடுக்க மறுக்கிறது. உறுதி சொன்னதைக் கூட கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

ஆனாலும், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை சோதனை வாயிலாக, அ.தி.மு.க.,வை போல தி.மு.க.,வையும், தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, பா.ஜ., நினைக்கிறது; அது ஒருபோதும் நடக்காது.முதல்வர் ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும் போதே, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றோம். இப்போது, தி.மு.க., ஆளும்கட்சியாக இருக்கிறது.

எனவே, ஒரு சதவீதம் ஓட்டு கூட குறையக்கூடாது. அதனால், கட்சியினர் ஒவ்வொருவரும் தேர்தல் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வரும் மூன்று மாதங்களுக்கு, வேறு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தொண்டர்கள் முழு நேரமும் கட்சிக்காக பணியாற்ற வேண்டும். லோக்சபா தேர்தல் வெற்றி தான், 2026 சட்டசபை தேர்தலுக்கான அடித்தளம். இதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்..