பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது: கோவையில் சாலை மறியல் ஈடுபட்ட பா.ஜ.க வினர் கைது
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசியதாக, தி.மு.க வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல் துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க வினர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க வினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை மட்டும் கைது செய்தது ஏன்? என கேள்வி எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.
இதை அடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்ட பா.ஜ.க வினரை காவல் துறையினர் கைது செய்தனர்.